அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

20.12.11

புத்தகச் சுமை இனி இல்லை, ஒரு பருவத்திற்கு ஒரே புத்தகம்-20-12-2011

வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடங்களும் ஒரே புத்தகத்தில் அடங்கும் வகையில் ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகம் என்ற முறை அறிமுகமாகிறது. இதனால் புத்தகச் சுமை இனி இல்லை.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2012-13ம் கல்வியாண்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படவில்லை.
இந்த புதிய முறையில், 1 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 3 புத்தகங்கள் வழங்கப்படும். முதல் புத்தகம் காலாண்டு தேர்வு வரையிலும், இரண்டாம் புத்தகம் அரையாண்டு வரையிலும், 3வது புத்தகம் இறுதியாண்டு தேர்வு வரையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த முப்பருவ முறையின்படி, 1 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்திற்கு 2 புத்தகங்கள் எடுத்துச் செல்லும் வகையில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட உள்ளன. 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 முதல் 6 புத்தகங்கள் வரை வழக்கமான முறையில் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாட நூல்களை மூன்றாகப் பிரிப்பது குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ஸ்ரீதர், பரிந்துரையை ஏற்றுக் கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், 1, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவத்திற்கும் 3 புத்தகங்கள் தயாரிக்கப்படும். 7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தை தொகுதி 1 எனவும், கணக்கு அறிவியல், சமூக அறிவியலைத் தொகுதி 2 எனவும் ஒரு பருவத்திற்கு 2 என மொத்தம் 6 புத்தகங்கள் வழங்கப்படும்.
தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டு வழிகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.
சிறுபான்மை மொழிப் பாடங்களில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர பிற பாடப் புத்தகங்கள் அந்தந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். சிறுபான்மை மொழிப் பாடப் புத்தகம் மூன்று பிரிவாக பிரிக்கப்படாமல் இப்போதுள்ளது போலவே ஒரே புத்தகமாக வழங்கப்படும்.
ஆசிரியர் கல்வி வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பாட நூல்களைப் பிரித்து அச்சிட தமிழ்நாடு பாட நூல் கழகத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், பிழையற்ற சீரான முப்பருவ புத்தகம் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளித் துவக்க நாட்களிலேயே கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.