அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

30.1.12


திரிசங்கு நிலையில் பகுதி நேர ஆசிரியர் நியமனம்-30-01-2012

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இசை, தையல், ஓவியம், உடற்கல்வி, கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக அரசிடமிருந்து தெளிவான மறு உத்தரவை எதிர்பார்த்து கல்வித்துறை காத்திருக்கிறது.

தற்போது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் இப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன்படி காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி மாவட்ட துவக்க கல்வி அதிகாரி சம்பந்தப்பட்ட பாட மூத்த ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இத்தேர்வுக் குழுவினர் தங்கள் மாவட்டங்களில் பகுதி நேர சிறப்பு ஆசிரியருக்கு விண்ணப்பித்தவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்முகத் தேர்வை சமீபத்தில் நடத்தினர்.
இதில் கூடுதல் கல்வித் தகுதி பணி அனுபவம், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, கல்வி பயின்ற ஆண்டு, இதர திறமைகள் ஆகியவை ஆராயப்பட்டன. இதற்கான, அனைத்து வழிமுறைகளும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பணி நியமனத்தில் எவ்வித புகாருக்கும் இடம் தராத வகையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வுகளை ஜனவரி 15க்குள் முடித்து தேர்வானவர்கள் ஜன., 27ல் இருந்து அனைவரும் பள்ளிகளில் சேரும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இருந்தபோதிலும், பல மாவட்டங்களில் அதிகமானவர்கள் விண்ணப்பித்ததை அடுத்து நேர்முகத் தேர்வுப் பணிகள் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்பணியிடத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்கிற நோக்கில், ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்தவர்களின் அரசியல் தலையீடுகளும் அதிகரித்துள்ளது.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்துக்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களை பணியமர்த்த அரசிடமிருந்து மறு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அரசிடமிருந்து தெளிவான மறு உத்தரவு வரும் வரை காத்திருக்க, கல்வித் துறை இணை இயக்குனர்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.